Thursday, November 13, 2008

பழி சுமக்கும் மாப்பிள்ளை வீட்டார்

சென்ற இதழ் 'அனுபவங்கள் பேசுகின்றன' பகுதியில், 'மாப்பிள்ளை வீட்டார் மேல் பழி போடும் முன்..' என்ற தலைப்பில் ஒரு வாசகியின் அனுபவம் வெளியாகியிருந்தது. வரதட்சணை பிரச்னைக்கு மாப் பிள்ளை வீட்டார் மட்டுமே காரணமல்ல என்று கலகலப் பாக நமக்கு எடுத்துச் சொன்ன அனுபவத்தின் தொடர்ச்சியாக பல வாசகிகள் தங்கள் அனுபவங்களை நமக்கு எழுதி அனுப்பியிருந்தார்கள்.

அவற்றில் இரண்டு கடிதங்கள் குறிப்பிடத்தகுந்தவை.. 'பெண் வீட்டாரைக் கொடுமைப் படுத்தும் கொள்ளைக் கூட்டமாகத்தான் எல்லோரும் மாப்பிள்ளை வீட்டாரைப் பார்க்கிறார்கள். ஆனால், பெண் வீட்டாரால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் நாங்கள்' என்று சொன்ன அந்தக் கண்ணீர் கடிதங்கள் இதோ..

இரண்டு வருடங்களுக்கு முன்பு என் மகனுக்கு ஆந்திராவைச் சேர்ந்த மணமகளைப் பார்த்து ஆசை ஆசையாகத் திருமணம் செய்தோம். 'வரதட்சணை தேவையில்லை' என்று சொன்னதால்.. மகிழ்ச்சிகரமாகவே திருமணம் நடந்தேறியது.

வந்த மருமகள் செல்லமாக வளர்ந்த பெண்.. திருமணமான பிறகும் கூட அவள் பெற்றோர் மாதா மாதம் பெண்ணைப் பார்க்க வந்து நான்கு நாட்கள் தங்கியிருந்து விட்டுப் போவார்கள்.அதற்கும் நாங்கள் சந்தோஷப்பட்டோமே தவிர, கொஞ்சமும் முகம் சுளித்ததில்லை.

மருமகள் தாய்மை அடையப் போகிறாள் என்றதும் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். அன்பாக கவனித்துக் கொள்ளவும் செய்தேன். ஆனால், அவள் 6 மாதமாக இருந்தபோது, திடீரென்று என் பிள்ளையிடம் சண்டை போட்டுக் கொண்டு தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்தும் திரும்பவில்லை.

குழந்தை பிறந்த தகவலை யாரோ ஒருவர் மூலமாக அறிந்து, மறுநாளே நாங்கள் குடும்பத்துடன் அவள் வீட்டுக்குச் சென்றோம். சென்ற வாரம் குழந்தைக்கு புண்ணியாஜனம் செய்ததாகவும், நான் என் பையனை அனுப்பவில்லை என்றும் புகாராக சொன்னாள். எங்களுக்கு தகவலே தெரிவிக்கவில்லை.

ஆனாலும் பரவாயில்லை என்று அங்கே சமாதானம் பேசி விட்டு வந்தோம். மருமகள் பேரனுடன் வருவாள் என்று எதிர்பார்த்த எங்களுக்கு இடி போல அவளிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. 'சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டதாகவும்.. அவளுடைய பெற்றோரை கீழ்த்தரமாகத் திட்டியதாகவும்.. தலைமுடியை வெட்டச் சொன்னதாகவும்.. என் மகனும் நானும் அவளை அடித்து, 50 சவரன் தங்கம், 5 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் சொல்லி எங்கள் மீது கேஸ் போட்டிருக்கிறாள் (D.V.C/2005).

கணவரும் மாமனாரும் தலா 10 லட்ச ரூபாயும், நான் 5 லட்ச ரூபாயும் அவளுக்கு இழப்பீடாகத் தரவேண்டும் என்றும், மாதந்தோறும் 10,000/- ரூபாயும் ஜீவனாம்சமாகத் தரவேண்டும் என்றும் கேட்டிருக்கிறாள். கொடுமை என்னவென்றால்.. என் மகன் மகாராஷ்டிராவில் இருக்கிறான். நானும் என் கணவரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம். ஆனால், கேஸ் ஆந்திராவில் போடப்பட்டுள்ளது. கோர்ட், கேஸ் என்று ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆந்திராவுக்கு அலைய முடியுமா? மகனின் வாழ்க்கையும் மண்ணாகிப் போய், ஒன்றரை வயது பேரக் குழந்தையை பார்க்கக்கூட முடியாத பரிதாபத்துக்குரியவர்களாகி நிற்கிறோம்.



பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுவது போல இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான். ஆந்திராவில் இப்படிப்பட்ட பெண்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சிலர் சொல்லிக் கேள்விப்படும்போது வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

எது எப்படியோ.. எங்கள் மருமகள் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. சட்டமும் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. பெண் வீட்டார்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பெற்ற மகளையே படுகுழியில் தள்ளுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. காலம் இப்படியேவா இருந்துவிடும்? பெற்றவர்கள் காலத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு ஆதரவு யார்? நாங்கள் தரும் இருபத்தைந்து லட்சமும் மாதம் பத்தாயிரமும்தான் அவளுக்கு வாழ்க்கையா? பெண் வீட்டாரும் சட்ட நிபுணர்களும் சிந்திக்க வேண்டும்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி



--------------------------------------------------------------------------------
என் முதல் மகனுக்குக் கல்யாணமாகி ஏழு வயதில் பேத்தி இருக்கிறாள். இரண்டாவது மகனுக்கு சென்ற வருடம்தான் திருமணம் செய் தோம். அவன் நல்ல கம்பெனியில் கௌரவமான வேலையில் இருக்கிறான். யாருடனும் அதிகம் பேச மாட்டான். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. வெளிநாட்டுக்கெல்லாம் போய்வந்திருக்கிறான். அப்படிப்பட்டவனை அவன் மனைவி 'பக்குவம் இல்லாதவன்' என்று குற்றம் சாட்டிப் பிரிந்து விட்டது தான் எங்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.
ஆறு மாதம் வரை பெண் வீட்டார் எங்களோடு சுமுகமாகத்தான் இருந்தார்கள். பெண் ஐந்து மாதம் கர்ப்பம் என்று தெரிந்ததும்தான் பிரச்னை ஆரம்பித்தது. நான் அவளுக்கு 'மென்ட்டல் டார்ச்சர்' கொடுத்தேனாம். குடும்ப நீதிமன்றம் போகப் போவதாக மிரட்டுகிறார்கள்.

குழந்தை பிறந்தபோது அனைத்தையும் மறந்து நாங்கள் ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். பிறகு வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கிறோம். ஆனால், திடீரென்று அவர்கள் எல்லோரும் வீட்டை மாற்றிக் கொண்டு வேறு ஊருக்குப் போய் விட்டார்கள். காரணம் கேட்டதற்கு அவர்கள் பையனுக்கு (என் மருமகளின் தம்பிக்கு) அங்கே வேலை கிடைத்து விட்டது என்றார்கள். இப்போதாவது அவளை வீட்டுக்கு அழைத்து வரலாம் என்று என் மகன் அங்கு போனபோது, 'நான் என் அப்பா, அம்மாவை விட்டு வர மாட்டேன்.. நீ இந்த ஊரில் வேலை தேடிக் கொண்டு வா.. அப்போதும் மூன்று நாள் அம்மா வீட்டிலும் நான்கு நாள்தான் உன் வீட்டிலும் இருப்பேன்' என்றாளாம்.

ஒருவேளை அந்த தூரத்து ஊரில் கேஸ் போட்டு எங்களை அலைக்கழித்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. பிள்ளையைப் பெற்றவர்களின் கதியைப் பாருங்கள்!

- சாந்தா, சென்னை



--------------------------------------------------------------------------------


''பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுவது போல இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான்'' என்று நம் வாசகி சொல்லியிருக்கும் கருத்து அனுமானம்தான் என்றாலும், ஆராயப்பட வேண்டியது. அது பற்றிக் கேட்டபோது சட்ட நிபுணர்கள் தந்த அதிர்ச்சிகள் .


--------------------------------------------------------------------------------



பழி சுமக்கும் மாப்பிள்ளை வீட்டார்

"இப்படியும் இருக்கிறார்கள்!"


நமது வாசகிகள் சொல்லி யிருப்பது போல, ''ஆண்களைத் திட்டமிட்டுத் திருமணம் செய்து, பிறகு சட்டத்தின் பெயரால் மிரட்டும் பெண்களும் இருக்கிறார்களா?'' என்ற கேள்வியோடு வழக்கறிஞர் மகேஷ்வரியை சந்தித்தோம்.

''அந்த அளவுக்கு ஆபத்தான ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்களா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், உங்கள் வாசகி சொல்லியிருப்பது போல சட்டத்தின் துணையோடு கணவனையும் புகுந்த வீட்டையும் மிரட்டும் பெண்கள் நிறையவே இருக்கிறார்கள்'' என்றவர், தன்னிடம் வந்த ஒரு வழக்கையே அதற்கு உதாரணமாக சொன்னார்..

''சிங்கப்பூர் மாப்பிள்ளை பிரபுவைத் திருமணம் செய்து அங்கு குடியேறியவள் ரேத்னா. அங்கிருந்த மேல்நாட்டுக் கலாசாரம் அவளுக்குப் பிடித்துவிட, பிரபுவின் பேச்சை மீறி நண்பர்கள், பார்ட்டி என்று ஊர் சுற்ற ஆரம்பித்தாள். தன் செலவுகளுக்காக வேலைக்கும் சென்றாள். அந்த நேரம் பார்த்து பிரபுவுக்கு விபத்து ஏற்பட, சிகிச்சைக்காக இந்தியாவுக்கே திரும்பி வந்து விட்டார்கள். இங்கேயே நிரந்தரமாக தங்கிவிடலாம் என்ற பிரபுவின் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ரத்னா, யாருக்கும் தெரியாமல் தனது நகைகள் மற்றும் சான்றிதழ்களுடன் சிங்கப்பூர் சென்று விட்டாள்.

அதிர்ந்து போன பிரபு, 'தன் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும்' என வழக்கு தொடர்ந்தார். சிங்கப்பூருக்கு வந்தால்தான் கணவருடன் சேர்ந்து வாழ முடியும் என்பது ரத்னா தரப்பு வாதம். அதற்கு பிரபு ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த ரத்னா, பிரபு குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்திருக்கிறாள். பாவம், பிரபுவின் குடும்பத்தினர் தற்போது நீதிமன்ற படியேறிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்காக, குடும்ப வன்முறை சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்றவற்றை எல்லா பெண்களும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தமில்லை. தவறாகப் பயன்படுத்தும் ஒரு சில பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை'' என்றார் அவர்.

சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரையும் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம்.

''திருமண மோசடியை மணப்பெண்கள் செய்வதாக இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. மாநில அளவில் புகார்கள் எதுவும் பதிவானதாகவும் தெரியவில்லை. ஆனால், சாதாரணப் பெண்களே வரதட்சணை புகார்களை ஏதோ அணு ஆயுதம் போலத்தான் பயன்படுத்துகிறார்கள்'' என்றவர், ''என்னிடம் வருகிற புகார்களில் பத்து சதவிகிதம் கூட உண்மை இருப்பதில்லை'' என்கிற உண்மையைப் போட்டு உடைத்தார்.

''சில சமயம் சில பெண்கள் முன் வைக்கும் புகார்கள் நம்ப முடியாதவையாக.. அதே சமயம் மிகக் கொடூரமானவையாகவும் இருக்கும். மாமனார் என்னிடம் தவறாக நடந்தார் என்ற அளவில் கூட புகார்கள் கொடுக்க இந்தக் காலத்தில் தயங்குவதில்லை. அந்த மாமனாரைப் பார்த்தாலே அது பொய் என்பது நமக்குப் புரியும். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்கள் என்ன சொன்னால் கேஸ் ஜெயிக்கும் என்று நினைக்கிறார்களே தவிர, தங்கள் வாழ்க்கையையோ தார்மீக நியாயங்களையோ நினைத்துப் பார்ப்பதில்லை'' என்று அவர் சொல்லச் சொல்ல, அந்த வார்த்தைகளின் நிதர்சனம் நம்மைச் சுட்டது.

காவல் நிலையம் செல்லும் முன் யோசிப்பார்களா இரு வீட்டாரும்!

- லாவண்யா
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

No comments: